தமிழகம்34,036 ஆசிரியர் நியமனம்: முதல்வர் ஜெயலலிதா


சென்னை, ஆக. 26: பள்ளிக்கூடங்களில் மாணவ, மாணவியருக்கு தரமான கல்வி பெறுவதற்கான சூழலை ஏற்படுத்தும் நோக்கத்தில் முழுநேர, பகுதிநேர ஆசிரியர்கள் 34,036 பேர் நியமனம், பாடப் புத்தக சுமை குறைப்பு, மாணவர்களுக்கு ஒரே மாதிரியான புத்தகப் பைகள் வழங்குவது உள்ளிட்ட பல திட்டங்களை முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை அறிவித்தார்.
 சட்டப்பேரவையில் தாமாக முன்வந்து விதி 110-ன் கீழ் அவர் சமர்ப்பித்த அறிக்கையின் முக்கிய அம்சங்கள்:
 "அனைவருக்கும் தரமான கல்வியை வழங்கும் நோக்கத்தின் ஒரு அங்கமாக, மேலும் 65 தொடக்கப் பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாகவும், 710 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும் ஆக்கப்படும்.
 தரம் உயர்த்தப்படுவதற்கு ஏற்ப 9,735 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் 3,565 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள், ஆக மொத்தம் 13,300 ஆசிரியர் பணியிடங்கள் ரூ. 315.30 கோடி செலவில் இந்த ஆண்டிலேயே ஏற்படுத்தப்படும்
 உடற்கல்வி, ஓவியம், தொழிற்கல்வி ஆகியவற்றுக்காக ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 16,549 பகுதி நேர ஆசிரியர் பணியிடங்கள் ஏற்படுத்தப்படும்.
 இதனால் இப்பள்ளிகளில் 6, 7 மற்றும் 8 ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவ, மாணவியர் பயன் அடைவர். இதற்கு, அரசுக்கு ஆண்டுக்கு ரூ. 99.29 கோடி செலவு ஏற்படும்.
 முனைவர் முத்துக்குமரன் குழு அளித்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளவாறு, சமச்சீர் கல்விக்கு மிகவும் இன்றியமையாதது அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள் ஆகும். பொது பாடத் திட்டம் மட்டும் சமச்சீர் கல்வி ஆகாது.
 இதனை நன்கு உணர்ந்த இந்த அரசு, ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், இந்தக் கல்வி ஆண்டில், கூடுதல் வகுப்பறைகள், கழிப்பறைகள், சுகாதாரமான குடிநீர் வசதி, சுற்றுச்சுவர் போன்ற உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்கும். இந்தக் கல்வி ஆண்டில் ரூ. 1082.71 கோடியில் இவை ஏற்படுத்தப்படும்.
 மேற்கண்ட திட்டங்கள் அனைத்தும், மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து செயல்படுத்தும் அனைவருக்கும் கல்வித் திட்டம் மற்றும் அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் செயல்படுத்தப்படும்.
 நிலை உயர்த்தப்பட்ட மேல்நிலைப் பள்ளிகளுக்கு, 3,187 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள், முழுவதும் மாநில அரசின் நிதியில் இருந்து, ரூ. 90.70 கோடி செலவில், இந்தக் கல்வி ஆண்டு முதல் இரண்டு கட்டங்களில் ஏற்படுத்தப்படும்.
 1985 ஆம் ஆண்டிலிருந்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு இலவசமாக பாடப்புத்தகங்கள் வழங்கப்படுகின்றன. மாணவர்களிடம் இருக்கும் ஏற்றத் தாழ்வுகளை நீக்கும் நல்லெண்ணத்துடன் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் அனைத்து மாணவ மாணவியர்களுக்கும் ஒரே மாதிரியான புத்தகப் பைகள், கற்றலுக்குத் தேவையான கணித உபகரணப் பெட்டி - அதாவது ஜியாமெட்ரி பெட்டி - கிராமப்புற மாணவ மாணவியர்களுக்கு இதுவரை கிடைக்கப் பெறாத வண்ணப் பென்சில்கள், புவியியல் வரைபடங்கள் போன்றவை வரும் கல்வியாண்டு முதல் வழங்கப்படும். இதற்காக ஆண்டுக்கு தோராயமாக ரூ. 119.48 கோடி செலவிடப்படும்.
 அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் துப்புரவாளர் மற்றும் இதர பணிகளுக்கான 5,000 ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் ஏற்படுத்தப்படும். இதற்கு அரசுக்கு ஆண்டுக்கு ரூ. 60 கோடி செலவாகும்.
 புத்தகச் சுமையை குறைக்கும் வகையில் வரும் கல்வியாண்டு முதல் தமிழ்நாட்டில் முப்பருவ முறை, அறிமுகப்படுத்தப்படும். முழுக் கல்வியாண்டிற்குரிய பாடப் புத்தகங்கள் மூன்று பருவங்களுக்கு ஏற்றவாறு பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பருவ முடிவிலும் தொடர் மற்றும் கூட்டு மதிப்பீட்டுடன் கூடிய தேர்வுகள் நடத்தப்படும்.
 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவ, மாணவியருக்கு வழங்கப்படும் மதிப்பெண் சான்றிதழ்கள் தவறாகக் கையாளக் கூடிய வாய்ப்பு உள்ளது.
 எனவே, 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு அவர்களின் புகைப்படத்துடன் கூடிய மறைமுகக் குறியீட்டுடன் கூடிய மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படும்.
 குழந்தைகளின் சிந்திக்கும் ஆற்றலை மேம்படுத்தும் நோக்கத்துடன், 7 முதல் 17 வயதுள்ள பள்ளி செல்லும் மாணவ, மாணவியருக்கு சதுரங்க விளையாட்டு வரும் கல்வியாண்டு முதல் அறிமுகப்படுத்தப்படும்.
 இந்த விளையாட்டினால் மாணவ, மாணவியரின் அறிவுத் திறன் வளர்வதுடன், கூர்மையாக சிந்திக்கும் ஆற்றலும் விரிவடையும்.
 கணினி மூலம் கற்பது பள்ளிகளில் இப்போது இன்றியமையாததாக உள்ளது. எல்லா வகுப்புகளிலும் படிக்கும் மாணவ, மாணவியர்கள் பயன்பெறும் விதத்திலும், தமிழகத்தில் உள்ள அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் கற்பிக்கும் ஆசிரியர் ஆசிரியைகளின் வகுப்புறைக் கற்றல், கற்பித்தல் முறைகளை மேம்படுத்தும் வகையிலும், "பள்ளிகளில் தகவல் மற்றும் தொடர்பியல் சேவை (தமிழ்நாடு)' என்ற புதிய திட்டம் உருவாக்கப்படும்.
 இத்திட்டத்தில் எல்லா வகுப்புகளுக்கும் ஆன பாடப் புத்தகங்களின் உட்பொருளை கணினிமயமாக மாற்றி மையக் கணினி மூலமாக வகுப்பறைகளில் வழங்க வழிவகை செய்யப்படும். எல்லா மாணவ, மாணவியர்களும் பயன் அடையும் பொருட்டு சிறந்த ஆசிரியர்களின் விரிவுரைகளின் தொகுப்புகள் கல்வி செயற்கைக்கோள் வாயிலாக வகுப்பறைகளுக்குச் சென்றடைய இத்திட்டத்தின் வாயிலாக நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
 பள்ளிக் கல்வித் துறை மூலம் எனது அரசு செயல்படுத்த இருக்கும் இந்தத் திட்டங்களால், மாநிலத்தில் உள்ள பள்ளி மாணவ, மாணவியர்கள், உரிய உட்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய பள்ளிகளில், மிகவும் உகந்த சூழலில், தரமான கல்வி கற்கும் நிலை உருவாகி, உண்மையான சமச்சீர் கல்வி கிடைக்க வழி வகுக்கும்' என்றார் முதல்வர்.  

 THANKS : DINAMANI

Share on Google Plus

About jeevan

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment